Tuesday, April 22, 2008

BCCI யின் செயல்பாடுகள்

மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.

இந்தியாவில் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைக்காத அங்கீகாரம், புகழ், பணம், லைம் லைட் வெளிச்சம் எல்லாமே ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது என்னவோ கிரிக்கெட்டில் மட்டும்தான். ஆனால் ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட்டையும் Represent செய்வதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் BCCI யின் செயல்பாடுகள் சமீப காலமாய் கட்டுக்கடங்கா சர்வாதிகாரத் தன்மையுடன் சென்று கொண்டிருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. அணி வீரர்களுக்கு என்று அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளும், தேர்வு செய்வதற்கு என்று தங்களுக்குள் கடைபிடிக்கும் சில எழுதப் படாத சட்ட திட்டங்களும் வெகு நிச்சயமாய் BCCI யின் மீது வெறுப்பைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.

இந்திய அணித் தேர்வில் Transparancy இருக்க வேண்டும் என்ற குரல் அவ்வப் போது கடும் கோபத்துடனும், வேகத்துடனும் எழுந்துக் கொண்டுதான் இருக்கின்றது. இது மட்டுமின்றி இந்திய மைதானங்கள், உள்ளூர் போட்டிகள், ஃபாஸ்ட் பவுலிங் பிட்சுகள் போன்ற பல விஷயங்கள் குறித்தான BCCI யின் மீதான பல கேள்விகளுக்கு அவர்கள் தரப்பிலிருந்து, சமாதானமாகவோ, தீர்வாகவோ எந்த ஒரு பதிலையும் இது வரை எவரும் பெற்றிருக்க வில்லை. ஒரு வேளை BCCI விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களோ???

கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் ஒருவர், பல மாத காலம் ஃபார்மில் இல்லை என்று சொல்லி கழட்டி விடப்பட்ட பின்பும், பல போராட்டங்களிற்குப் பின்பு அணியில் இடம் பிடித்து, தன்னுடைய திறமையை, கோபத்தைக் காட்டியவர், ஒரு கால கட்டத்தில் படு மோசமாய்ச் சொதப்பிக் கொண்டிருந்த இந்திய அணியை,தலைமைப் பொறுப்பேற்று, ஒரு மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு வந்தவர், யுவராஜ், சேவாக், கைஃப், ஸாஹீர், ஹர்பஜன் போன்ற பல வீர்ர்களை வளர்த்தெடுத்தவர், ” Even I would like to die for such a captain” என்று இன்றும் யுவராஜால் மிக மரியாதையாக பார்க்கப்படும் ஒரு வீரர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட் தேர்வுக்குழு தயவு தாட்சணையின்றி ஒரு சிறந்த வீரரை, அதுவும் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் அதிக பட்ச ஃபார்மில் இருக்கும் போதே நீக்கி இருக்கின்றது.

வெறுமனே சில மாதங்களிற்கு முன்பு பேட்டிங்கின் மூலம் இன்னும் அதிக பட்சமாக தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ராகுல் டிராவிட் கேப்டன் பொறுப்பிலிருந்து தானாக முன் வந்து விலகி இருந்திரா விட்டால், தான் அணியில் இடம் பெறுவோமோ மாட்டோமா என்ற கவலையுடன் டிராவிட் இப்போது உட்காந்திருக்க வேண்டிய தேவையே வந்திருக்காது. அவரை கழட்டி விட்டிருக்கும் இதே தேர்வாளர்கள், ஒன்று சேர்ந்து டிராவிட் இந்த மூன்று நாடுகள் மோதும் போட்டியில், இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவார் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

கிரிக்கெட் கான்ட்ரவெர்சியில் சித்து சொன்னது போல தோனிதான் இப்படி விரும்பினார் என்று காரணம் சொல்வதாய் இருந்தால், அணித் தேர்வாளராக அவரையே நியமித்து விடலாமே? அப்புறம் எதற்கு வெங்சர்காரும், ராஜூவும்???

இந்திய அணியை விமர்சித்து நல்வழிப் படுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு திரியும் இந்த வெங்சர்கார், ரவி சாஸ்திரி, கவாஸ்கர் போன்றோர் மீது என் தனிப்பட்ட குற்றச் சாட்டுகள் என நான் வைக்க விரும்புவது நிறைய்ய இருக்கிறது. வெங்சர்கார் தான் ஆர்ட்டிகிள் எழுத கூடாது என்று BCCI சொன்னால் அதை ஈகோ, பிரச்சினையாக பார்ப்பார். ரவி சாஸ்திரியை இந்திய அணி மேனேஜராய் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்தச் சொன்னால், முன் வர மாட்டார். ஆனால் கமெண்டரி பாக்ஸில் உட்கார்ந்துக் கொண்டு கொடுத்த காசுக்கு மிச்சமாய் கூவச் சொன்னால் சந்தோஷமாய் செய்வார். இவர்கள் எவரும் தனது தனிப்பட்ட வருமானத்தை உறுதிப் படுத்திக் கொண்டு, ஒரு பொழுது போக்கைப் போல இந்திய அணியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று அவ்வப் போது தோன்றுவதுண்டு.

உலக கிரிக்கெட்டிலேயே மிக லாபகரமான ஒரு அமைப்பாக கருதப் படுவது BCCI தான். ஆனால் BCCI யின் செயல்பாடுகளை சொல்ல சொந்தமாய் ஒரு இணையத் தளம் கூட இன்னும் ஆரம்பிக்காதது, திட்டமிட்டே Transparant முறையை தவிர்க்கும் பொருட்டுதானோ என்று தோன்றுகிறது. http://bcci.cricket.deepthi.com யை விடுங்கள். அது சொந்தத் தளம் இல்லை.

சில காலங்களிற்கு முன்பு, பல வருடங்களாய் எதிர் கேள்வியில்லா தலைவராய் இருந்து வந்தார் ஜக்மோகன் டால்மியா. தனது பதவிக்காலம் முடிந்தும், தன் ஈகோவைத் திருப்தி செய்து கொள்ள கௌரவத் தலைவர் என்று புதிதாய் ஒரு பதவியை ஏற்பாடு செய்து, ஏகபோக ஆட்சி செய்து வந்திருக்கிறார். பின்பு அதுவே பல பிரச்சினைகளுக்குப் பின்பு தேர்தல் நடத்தப் பட்டு சரத் பவார் கையில் கொடுக்கப் பட்டது. அவரது காலத்திலும் சரி, பவாரின் காலத்திலும் சரி BCCI ல் பிரச்சினைகளுக்கு மட்டுமே பஞ்சமே இருந்ததில்லை.

இந்திய கிரிக்கெட் மைதானங்கள் பேட்டிங்குக்கு சாதகமாய் இருக்கும் சூழ்நிலையை மாற்றி, முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாய் சில மைதானங்களை அமைக்க வேண்டும், அதன் மூலம் இந்திய வீரர்களை அயல் நாட்டு மைதானங்களிற்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டும், 125, 132 கி.மீ வேகங்களைத் தாண்டி, 140ஐ சர்வ சாதாரணமாய்த் தொடும் வேகப் பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும், பலகாலமாய் நடத்தி வரும் (அலுத்துப் போன) 5 நாட்கள் விளையாடும் ரஞ்சிப் போட்டி மட்டுமல்லாது, ஒரு நாள் போட்டி, 20 ஓவர், 40 ஓவர்கள் கொண்ட பல்வேறு வகை மாறுபட்ட போட்டிகள் நடத்தவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் பல காலமாய் எழுப்பப் பெற்று வந்தாலும் அதை மதிக்காமல் இருந்து வந்த BCCI, திடீரென்று ஏற்படுத்தப்பட்ட ICL ன் அறிவிப்புகளுக்குப் பின்புதான், அவசர அவசரமாய் முழித்துக் கொண்டு, இனி நாங்களும் இது போன்ற போட்டிகளை நடத்துவோம் என்று அறிவிப்பு செய்கிறது.

இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வாங்கித் தந்தவர், இன்றுவரை தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர், 16 வருடம் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தவர், 5 வருடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாய் இருந்து வழி நடத்திய மிகச் சிறந்த முண்ணனி வீரராக கபில்தேவ் இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் பொருட்டு, ICL என்று ஒரு அமைப்பு தொடங்கக் கூடாதா? ICL ல் பங்கு பெறும் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப் பட மாட்டார்கள் என்று சர்வாதிகாரத்துடன் BCCI அறிவித்த போது கையைக் கட்டிக் கொண்டு வெறுமனே பார்வையாளராகத்தானே பலரால் இருக்க முடிந்தது. தான் விருப்பப் பட்ட அணிக்கு விளையாடும் உரிமையை பெற்றுத் தராமல் அப்புறம் எதற்கும் நாம் ஜனநாயகத்தைப் பற்றியும், தனி மனித சுதந்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும்???

இதே கிரிக்கெட் காண்ட்ரவெர்சியில் சில மாதங்களிற்கு முன்பு, எனக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கிரிக்கெட் மட்டுமே மூச்சாக இருந்து வந்திருக்கிறேன். இப்போது என்னால் ஆர்ட்டிக்கிள் எழுதியோ, வேறு ஏதேனும் வகையிலோ, அதிகமாய் பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அது எதுவுமே, இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் இந்த பொறுப்பிற்கு ஈடாகாது. என்னுடைய 16 வருட பங்களிப்பிற்குப் பிறகும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நான் கிரிக்கெட்டில் ஈடுபட கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? என்று கபில்தேவ் உணர்ச்சியுடன் கூறிய போதும், பதில் சொல்ல கையாலாகத BCCI அதே விடாப்பிடியுடன்தான் இருந்து வந்திருக்கிறது.

உங்களில் எவரேனும் இளம் வீரர்கள் தேவைதானே? மூத்த வீரர்களை அதிரடியாக நீக்கினால் அப்படி என்ன தவறு என்று கேட்கலாம். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வேறு எவரையும் விட சிறப்பான முறையில் பல வருடங்களாய் உழைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நீ எனக்கு தேவையில்லை என்று நிராகரிக்கப் படுவதனால் ஏற்படும் வலியை உங்களால் உணர முடியுமாயின், இதனையும் நீங்கள் உணரலாம்.

என்னுடைய மற்றும் உங்களுடைய எதிர்க்குரல்கள் பெரிய அளவில் மாற்றத்தை உண்டு பண்ணாமல் போகலாம். நாளை இந்த இளம் அணியினர் கூட எப்படியாவது போராடி வெற்றிகளைப் பெற்றுத் தரலாம். நாமும் கூட வழக்கம் போல் பழையதை மறந்து அடுத்த மேட்சை பார்க்க நம்மை தயார் செய்து கொள்ளலாம். ”யங்ஸ்டர்ஸ் கூட பரவாயில்லைப்பா, சுமாரா விளையாடுரானுங்க” என்று ஓவர்களின் நடுவே பேச்சுகளை பரிமாறிக் கொள்ளலாம்.

ஆனால் எது நடந்தாலும் ஒன்றை மாற்ற முடியாது. மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.

நேற்று கபில் தேவ். இன்று கங்குலி மற்றும் டிராவிட். நாளை அது சச்சினாகவோ, யுவராஜாகவோ, ஏன் தோனியாகக் கூட இருக்கலாம்.

மணி கட்ட ஆளில்லாமல் அப்போதும் பூனை துள்ளிக் குதித்துக் கொண்டுதானிருக்கும். நாம் வழக்கம் போல் அடுத்த போட்டியைப் பார்க்க தயாரகிக் கொண்டிருப்போம்.



click here to see original content

No comments: