Thursday, January 31, 2008

ஜெயா செய்திகள்

வணக்கம் ஜெயாடிவியின் தலைப்பு செய்திகள்


பெரும்பான்மை பலம் இல்லாத திமுக அரசு இயற்றும் சட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து.

நாம் இன்னும் தோற்கவில்லை. அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா உற்சாகம்

தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் அட்டூழியம்

கன்னியாகுமரியில் திமுகவினர் பயங்கர கொலைவெறி தாக்குதல்.வன்முறை.

சிறப்புச்செய்தி:கலைஞரின் கையாட்டு - பரபரப்பு செய்தி.

இனி விரிவான செய்திகள்:

பெரும்பான்மை பலம் இல்லாமல் பதவியேற்றுள்ள திமுக அரசு தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சிறுபான்மை அரசாக பதிவியேற்ற திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து துக்ளக் சோ கருத்து தெரிவி்க்கையில் சட்டசபையில் பெரும்பான்மையே இல்லாத திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது நகைப்பிற்குரியது என்றார். அடுத்த ஜனாதிபதியாக ஆர்.வி ஒருவேளை மீண்டும் பதவி ஏற்றால் பரம்பரை பகையை மனதில் கொண்டு இந்த ஆட்சியை கலைக்க போராடுவேன் என்று பெருமூச்சுடன் கூறினார் சோ ராமசாமி.

அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் இழந்து இருப்பது தேவையில்லை என்று கண்டித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டதை சுட்டிகாட்டினார்.அதே சமயம் தற்கொலை செய்து சாகும் அந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் கட்சியின் சார்பில் தரப்படும் என்றும் கூறி தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கூறுகையில் இன்னமும் அ.இ.அ.தி.மு.க தோல்வியை தழுவி விடவில்லை என்றார். இன்னமும் தான்தான் இரவு தலைமை செயலகத்திற்கு போய் விழித்திருந்து ஃபைல் பார்த்துவருவதாகவும் கருணாநிதி காலையில் வந்து வெறும் கையெழுத்து மட்டுமே போடுவதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அது சமயம் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.


அஸ்ஸாமில் நேற்று இரவு அல்பைகுட்டி என்ற கிராமத்தில் இரண்டு மணிநேரம் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் என்ன செய்கிறார் என்று பொதுமக்களும் நடுநிலைமைவாதிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.


நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் கிடந்த கல் ஒன்றில் இடித்துகொண்டதில் கால் சுண்டுவிரல் சுளுக்கிக் கொண்டது. திமுக அமைச்சரின் வீட்டிற்கு மிக அருகில் அதாவது ஐம்பது கிலோமீட்டர் அருகில் நடந்த இந்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை எழுப்பி உள்ளது.

நேற்று கருணாநிதி தலைமை செயலகத்திற்கு வந்துகொண்டிருந்தபோது கடற்கரை சாலையில் ஒரு ஆளுக்கு கையாட்டி டாட்டா கூறினார். நமது சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் கலைஞர் டாட்டா காண்பித்த தொண்ணூறு வயதான அந்த ஆளின் சகோதரர் 1967 ல் சிக்னல் இன்றி ரோட்டை கிராஸ் செய்த வழக்கில் அபராதம் கட்டியவர் என்று தெரியவந்தது.இது போன்ற கிரிமினல்களுடன் கருணாநிதி தொடர்பு வைத்திருப்பதுப்பற்றி நடுநிலையாளர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ட்ராபிக் சார்ஜென்ட்டுக்கள் மற்றும் அதிமுகவினரின் கருத்துக்கள் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கலைஞரின் கையாட்டு என்ற பெயரில் உங்கள் ஜெயா டிவியில் காலையும் மாலையும் ஒளிப்பரப்பாகும்.

இத்துடன் ஜெயா செய்திகள் முடிவடைந்தன.

No comments: